ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவழா கடந்த 24-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மனிதநேய வார விழா நிறைவு விழா பாளையங்கோட்டை சேவியர் கல்வியியல் கல்லூரியில் நடந்தது. நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், இளநிலை பொறியாளர் பொன்.சீனிவாசன், சவேரியார் கலைமனை அதிபர் ஹென்றிஜெரோம், சேவியர் கல்வியியல் கல்லூரி செயலாளர் மரிய சிங்கராயர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கப்பாண்டி, நோபல், ஜெய்சங்கர், ஞானபாக்கியம் சாந்தகுமாரி, சீனிவாசன் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார்கள் கலைமதி, ராஜேஸ்வரி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், விழா ஒருங்கிணைப்பாளருமான சுந்தரம் தொகுத்து வழங்கினார்.