செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் கிராமத்தில் வருவாய்த்துறையின் சார்பில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி தலைமை தாங்கினார். இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன், செங்கோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் இலத்தூர் ஊராட்சி மன்றத்திற்கு 1,000 பனை விதைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் புதிய திட்டமான நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை மானியத்தில் வழங்கப்பட்டது. மேலும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டங்கள் பற்றிய கையேடு மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரோஷன்பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்டல்சாமி, வருவாய் ஆய்வாளர் யாஸ்மின், முன்னோடி விவசாயிகள் ஓய்வுபெற்ற ஆசிரியர் இசக்கி, அன்புராஜ் பெரியஇசக்கி மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார்.