காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நீடாமங்கலம்:
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காண்டாமிருக வண்டுகள்
தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகள் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தென்னை மரத்தின் நுனிப் பகுதியில் உள்ள மட்டைகளுக்கு இடையே உள்ள சந்துகளில் புகுந்து குருத்து பகுதியை துளைத்து சென்று திசுக்களை உண்டு இந்த வண்டுகள் சேதத்தை விளைவிக்கும்.
பாதிக்கப்பட்ட இடத்தில் துளைத்த துவாரம் வழியாக சக்கையும், கழிவுப் பொருட்களும் வெளியே தள்ளப்பட்டு இருப்பதை காணமுடியும்.
மேலும் புதிதாக வெளிவரும் குருத்துக்கள் இலைகள் விரியும்போது மட்டையின் இருபுறமும் உள்ள இலைகளில் சம அளவில் துளைகள் தென்படுவதை பார்க்கலாம். இந்த காண்டாமிருக வண்டுகள் தென்னை மரத்தை தவிர பனை, தென்னை, எண்ணெய் பனை, அன்னாசி போன்றவற்றை தாக்கும் தன்மை உடையது.
விளக்கு பொறிகள்
காண்டாமிருக வண்டுகள் கருமை அல்லது சிவப்பு கலந்த கருமை நிறத்தில் இருக்கும். இந்த வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளுக்கு அருகில் எருக்குழிகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மாதத்துக்கு ஒரு முறை நன்கு கிளறி புழுக்களை வெளிக்கொண்டு வந்து அழிக்க வேண்டும்.
தென்னந்தோப்புகளில் மடிந்து கிடக்கும் மக்கிய தென்னை மரங்களின்
அடிப்பாகத்தில் புழுக்கள் வாழும்.
எனவே அவற்றை உடனுக்குடன் அகற்ற வேண்டும். வண்டுகள் துளைத்த துவாரம் வழியாக நீளமான கம்பியைக் கொண்டு குத்தி வண்டுகளை அழிக்கலாம். விளக்குப்பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
இறந்துவிடும்
காண்டாமிருக வண்டின் புழுக்களை அழிக்க எருக்குழியில் மெட்டாரைசியம் என்ற பூஞ்சாணத்தை ஆங்காங்கே துளையிட்டு செலுத்தும்போது புழுக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து விடும்.
ஒரு பங்கு வேப்பங்கொட்டை பவுடர், இரண்டு பங்கு மணலுடன் கலந்து 150 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு மட்டையின் அடிபாகத்தில் வைக்க வேண்டும்.
மேலும் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊறலை மண்பானைகளில் தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.