பயறுவகை பயிர்களை தாக்கும் பூச்சி-நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி?
பயறுவகை பயிர்களை தாக்கும் பூச்சி-நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பூச்சி-நோய் தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவது தொடர்பான முன் அறிவிப்பு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு, 1,541 எக்டேர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த பரிந்துரைகள் வந்துள்ளது. எனவே விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெறலாம்.
கட்டுப்படுத்தும் முறைகள்
உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதம் இசி என்ற மருந்து 200 மிலி, புள்ளி காய் துளைப்பான் மற்றும் பச்சை காய் துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்படுத்த குளோரான்ட்ரானிலிபுரோல் 18.5 எஸ்.சி. என்ற மருந்தை 60 மி.லி., உளுந்து மற்றும் துவரை பயிர்களில் காணப்படும் சாம்பல் நோயினை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசின் என்ற மருந்தை 200 கிராம் அல்லது நனையும் கந்தகத்தூள் என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள தட்டை பயிரில் காணப்படும் புள்ளி காய்த்துளைப்பான்களை தயோடிகார்ப் 75 சதம், டபுள்யூ பி என்ற மருந்தை 300 கிராம் என்ற அளவும் மற்றும் காய்நாவாய் பூச்சிகளை டைமீத்தோயேட் 30 சதம் இசி 200 மி.லி. என்ற மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.