நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

Update: 2023-04-30 18:45 GMT

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண் விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வை.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குலை நோய் தாக்குதல்

தற்போது நிலவி வரும் சீதோசன நிலை அதாவது விட்டு விட்டு மழை தூரல், பகல் நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது. விவசாயிகளின் கோடைகால நெற்பயிர் தூர்கட்டும் பருவம் மற்றும் நடவு தருணத்தில் உள்ளது.

எனவே குலைநோய் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகமாக தேவைப்படுகிறது. குலை நோயானது காற்று, விதை மற்றும் வைக்கோல் மூலம் பரவுகிறது. இதன் தாக்குதல் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி பின்பு இரண்டு பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவப்புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும் உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

பேசில்லஸ் சப்டிலிஸ் தூவ வேண்டும்

இந்த தாக்குதலின் உச்சகட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்பட்டு இலைகள் உதிர்ந்து விடும். நாற்றங்காலில் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகி இறந்துவிடும். மேலும் வளர்ந்த பயிரில் கணு குலை நோய் மற்றும் கழுத்து குலைநோய் என அனைத்து நிலைகளிலும் இதன் தாக்குதல் தென்படும்.

கோடை பருவத்திற்கு நடவு செய்யும் விவசாயிகள் நாற்றுக்களை நாற்று வேர் குளியல் அதாவது ஒரு எக்டேருக்கு அரை கிலோ அல்லது அரை லிட்டர் பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிர்க்கொல்லி பயன்படுத்த வேண்டும். நடவு செய்த 10 அல்லது 15 நாட்களில் நன்கு மக்கிய தொழு உரத்துடன் அரை கிலோ அல்லது 500 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நடவு செய்த வயலில் நேரடியாக தூவ வேண்டும்.

செயற்கை பூஞ்சானக்கொல்லிகளான கார்பன்டாசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்கிளிலோசோல் 500 கிராம் அல்லது அசாக்ஸிஸ்ட்ரோபின் 500 மில்லி ஒரு எக்டருக்கு ஏதாவது ஒரு பூஞ்சானக்கொல்லிகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்