தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமானது எப்படி?
தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமானது எப்படி? என வருவாய் அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த கோசலை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு அரசு சார்பில் தரிசு நிலம் என ஒதுக்கீடு செய்ததை திடீரென மதுரை மாவட்ட கலெக்டர் ரத்து செய்தார். அந்த நடவடிக்கையை ரத்து செய்து, அரசு வழங்கிய நிலத்தை எனக்கு ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடம் தரிசு நிலம் என 2006-ம் ஆண்டு அரசு ஆவணத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் 2008-ம் ஆண்டில் தனிநபருக்கு சொந்தமானது என்று அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதன் அடிப்படையில், மனுதாரருக்கு ஒதுக்கிய நிலத்தை கலெக்டர் ரத்து செய்து உள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளன. எனவே அந்த நிலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து, இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.