சாமானியர்களுக்கு ஏற்றம் எதுவும் இன்றி ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக மத்திய அரசின் பட்ஜெட் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வாசித்தார். இதில் உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய ஈரோடு பொதுமக்கள் பலரும் பட்ஜெட்டினால் ஏற்படும் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை குறித்து கருத்து தெரிவித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கூறி உள்ளனர்.
க.கண்ணன்
பெருந்துறையில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்வி விரிவாக்க மைய பேராசிரியர் க.கண்ணன் கூறியதாவது:-
வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. போக்குவரத்து துறை, ரெயில்வே, மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக அமையும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக நகர்ப்புற மேம்பாட்டு கட்டமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கி இருப்பது, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து இருப்பது வளர்ச்சிக்கு வித்திடும்.
பொது வினியோக திட்டத்துக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்து 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது. பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நல்ல அம்சங்கள் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆ.ராஜா
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் இணை செயலாளரும், தமிழ்நாடு யூத்ஹாஸ்டல்ஸ் அமைப்பு துறை தலைவருமான ஆ.ராஜா கூறியதாவது:-
பொதுவாக பழங்குடியினர் மக்கள் மேம்பாடு, பழங்குடி மாணவ-மாணவிகளுக்காக 740 மாதிரி பள்ளிக்கூடங்கள் தொடங்குவது, 38 ஆயிரத்து 800 புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு வீடுகள், தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் வரவேற்புக்கு உரியது. மருத்துவ கல்லூரிகளுடன் 157 செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தமிழகத்துக்கு ரெயில்வே துறையில் எந்த அறிவிப்பும் இல்லை. குளிர்சாதன பெட்டிகளை அதிகரித்து, 2-ம் வகுப்பு படுக்கை வசதியை குறைத்துக்கொண்டே வருவதும் வேதனை அளிப்பதாகும். சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாகும். சிகரெட் உள்ளிட்ட புகை பொருட்களுக்கு தடைவிதிக்காமல் 16 சதவீதம் வரி உயர்வு என்பது வேதனைக்கு உரியது. கர்நாடகாவுக்கு நிகராக தமிழகத்திலும் விவசாயம் உள்ளது. ஆனால் கர்நாடகாவுக்கு மட்டும் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு என்பது தமிழகத்துக்கு ஏமாற்றமாகும். பட்ஜெட்டில் புதிய விமான நிலையங்கள், மகளிர் குழுக்கள், ஏகலைவாக பள்ளிகள், புதிய சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட திட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
பெட்ரோல் -டீசல் விலை உயர்வதை தடுப்பது, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் பெரு நிறுவன முதலீட்டுக்கு பயன்படுத்துவது, வனங்கள் விரிவுக்கான திட்டங்கள் இல்லாதது என்று ஏமாற்றங்கள் அதிகம் கொண்ட பட்ஜெட்டாக இது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.எஸ்.கவுதமன்
தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் ஈரோடு சி.எஸ்.கவுதமன் கூறியதாவது:-
வருமான வரம்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு உயர்வு சிறப்பான அறிவிப்புகளாகும். இதுபோல் ரெயில்வே துறைக்கு சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டு 9 மடங்கு ஒதுக்கீடு செய்து இருப்பதாக நிதி மந்திரி அறிவித்து இருக்கிறார். ஆனால் அதில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை, சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில் ரெயில் கட்டண குறைப்பு இருக்குமா என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் அறிவிப்பில் உள்ள ரெயில்கள் அனைத்தும் வசதி படைத்தவர்களுக்கான ரெயில்களாகவே உள்ளன. கட்டுக்கடாங்காமல் உயர்ந்து உள்ள உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்க அறிவிப்பு இல்லை. வெள்ளி வரி, அதுசார்ந்த தொழிலாளர்களை பாதிக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் சாமானியர்களைப்பற்றி சிந்திக்காமல் போடப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது. சாமானியர்களுக்கு ஏற்றம் தராமல் ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.ஆர்.சுதந்திரராசு
தமிழ்நாடு சிறு-குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டின் அறிவிப்புகள் தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நுண்ணீர் பாசன மானியம் உயர்த்தப்படவில்லை. உர விலை குறைப்பு அறிவிப்பு இல்லை. விளைபொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படவில்லை. சமையல் எண்ணெய், பாமாயில் மீதான இறக்குமதி வரிவிதிப்பு குறித்த நடவடிக்கை இல்லை. தேங்காய் எண்ணெய்க்காக வரி விதிப்பு குறைக்கப்படவில்லை.
கரும்பு விவசாயிகள் எத்தனால் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பு இல்லை. அரசின் விவசாய மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட். இது பெரிய செல்வந்தர்களுக்கான பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.சிவநேசன்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் என்.சிவநேசன் கூறியதாவது:-
இந்த நிதி நிலை அறிக்கையை பார்த்தால் அறிவுசார்ந்த, நீண்ட தொலைநோக்கு பார்வை உடைய பட்ஜெட்டாக இது உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், விவசாயிகளின் கடனை அதிகப்படுத்துவது விவசாயிகளுக்கு சுமையை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு நேரடியாக பணப்பட்டுவாடா என்கிற திட்டம் வரவேற்கத்தக்கது.
சரக்கு மற்றும் சேவை வரி 2 பிரிவுகளில் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுபற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமாகும். வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம் என்று அறிவித்துவிட்டு, கல்விக்கடன், காப்பீட்டுக்கடன், வீட்டுக்கடன் வட்டி உள்ளிட்டவை சேர்க்கப்படாது என்று அறிவித்து இருப்பது எந்த பயனையும் தராது. சிறு-குறு தொழில்கள் ஊக்குவிப்புக்கு எந்த அறிவிப்பும் இல்லை. சுங்கச்சாவடிகள் இனிமேல் இருக்காது என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லாததும், ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கோடி வருவாய் வந்த பிறகும் போக்குவரத்து துறைக்கான திட்டமோ, சுங்க சாவடி அகற்றம் அறிவிப்போ இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.என்.பாஷா
தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா கூறியதாவது:-
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி ரெயில் தினசரி ரெயிலாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்படவில்லை. ஈரோடு ரெயில் நிலையத்துக்கு 5-வது பிளாட்பாரம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்துக்கு புதிய ரெயில்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. இந்த பட்ஜெட் முற்றிலும் கண்துடைப்பு பட்ஜெட், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தரும் பட்ஜெட்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.