மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை: தனியார் நிதி நிறுவன ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி?-கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-07-25 20:25 GMT

மேச்சேரி:

தொழிலாளி தற்கொலை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி கடைக்காரன் வளவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34), நெசவு தொழிலாளி. இவரும் கோகிலா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணாமலை, தன்னுடைய 2 மகன்களுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலன் கைது

விசாரணையில், அண்ணாமலையின் மனைவி கோகிலா, யாரோ ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அண்ணாமலை மகன்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதில் மகன்கள் பிழைத்துக் கொண்டனர். அண்ணாமலை மட்டும் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

அண்ணாமலை இறப்பு குறித்து அவருடைய தந்தை நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கோகிலாவின் தாய் மல்லிகா, கள்ளக்காதலன் தனியார் நிதி நிறுவன ஊழியர் இளங்கோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதற்கிடையே அண்ணாமலையின் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கோகிலா போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

ஜலகண்டாபுரத்தில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க சென்றேன். அங்கு பணிபுரிந்து வந்த இளங்கோவுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக செல்போன் எண்ணை பரிமாறி கொண்டோம். அடிக்கடி இருவரும் செல்போனில் பேசியதுடன் எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பி வந்தோம்.

நண்பர்களாக பழகிய எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் இதுவரை தனிமையில் சந்திக்கவில்லை. ஆனால் அந்தரங்கமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வந்தோம். இந்த விவகாரம் தெரிய வரவே, என்னுடைய கணவர் அதனை தட்டிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசில் கோகிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்