ரூ.2¾ கோடி கொள்ளையடித்த என்ஜினீயர்கள் சிக்கியது எப்படி?போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பேட்டி

கோபியில் ரூ.2¾ கோடி கொள்ளையடித்த என்ஜினீயர்கள் 2 பேர் சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.

Update: 2023-04-10 23:59 GMT

கடத்தூர்

கோபியில் ரூ.2¾ கோடி கொள்ளையடித்த என்ஜினீயர்கள் 2 பேர் சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.

ரூ.2¾ கோடி கொள்ளை

ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 27). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு சொந்தமான, கோபியில் உள்ள வீட்டை ரூ.2¾ கோடிக்கு வாங்குவதற்காக ரூ.15 லட்சம் முன்பணம் கொடுத்திருந்தார். மேலும் அந்த வீட்டில் உள்ள அலமாரியில் 4 பைகளில் ரூ.2¾ கோடியையும், 2½ பவுன் நகையையும் வைத்திருந்தார்.

கடந்த 7-ந் தேதி பணம் வைத்திருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.2¾ கோடியையும், நகையையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோபி போலீசில் சுதர்ஷன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

பணம்-நகை மீட்பு

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை நடந்த வீட்டின் முன்பு இருந்து ஒரு கார் சென்றது தெரியவந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியபோது காரில் சென்றவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (34), கோபி அருகே உள்ள அளுக்குளி கணபதி நகரை சேர்ந்த ஸ்ரீதரன் (27) ஆகியோர் என்பதும், சுதர்சனின் பங்குதாரர்களான இருவரும்தான் திட்டமிட்டு சுதர்சன் வைத்திருந்த ரூ.2¾ கோடியை கொள்ளையடித்தது என்பதும் தெரியவந்தது.

என்ஜினீயர்களான இருவரும் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழிலில் முதலீடு செய்யவும் முயன்றார்கள். இதற்காக அவர்கள் காரில் பணத்தை கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

ரத்தம் சிந்தியிருந்தது

இந்தநிலையில் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2¾ கோடியையும், 2½ பவுன் நகையையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட பணம் பாதுகாப்பாக கோபி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கோபி போலீஸ் நிலையத்துக்கு சென்று மீட்கப்பட்ட பணத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.2¾ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த வீட்டை பற்றியோ அல்லது பணம் வைத்திருக்கும் தகவல் பற்றியோ தெரிந்தவர்கள்தான் இதில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் வீட்டின் பூட்டை உடைக்கும்போது கொள்ளையில் ஈடுபட்டவருக்கு காயம் ஏற்பட்டு அந்த இடத்தில் ரத்தம் சிந்தியிருந்தது. அதுவும் இந்த வழக்கில் துப்பு துலக்க உதவியது.

கொள்ளை சம்பவங்கள் குறைவு

கண்காணிப்பு கேமராவில் பதிவான காரை வைத்துதான் புலன் விசாரணை தொடங்கப்பட்டது. 5 போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான தனிப்படையினர் துரிதமாக விசாரணை நடத்தி சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணமும், நகையும் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டால் நகை மற்றும் பொருட்களை மீட்டுவிடுவோம். கொள்ளைபோன ரூபாயை முழுமையாக மீட்க முடியாது. ஆனால் இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.2¾ கோடியும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் சங்கிலி பறிப்பு வழக்கு ஏதும் பதிவாகவில்லை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன.

பாராட்டு

மாவட்டம் முழுவதும் புதிதாக 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்து விடுகிறார்கள். இதனை தடுக்க தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கூடுதலாக அங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் தனிப்படை போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்