சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஓட்டலில் 'லிப்ட்'டில் சிக்கி ஊழியர் பலி
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலின் ‘லிப்டு’க்கு இடையில் சிக்கி ஊழியர் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நட்சத்திர ஓட்டல்
சென்னை பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பொருட்களை எடுத்துச்செல்வதற்காக, பிரத்யேகமாக அமைப்பட்டிருந்த ஓட்டல் 'லிப்டில்' டிராலி மூலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு 11-வது மாடிக்கு சென்றார். அந்த 'லிப்டின்' கதவுகள் சரியாக மூடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 9-வது மாடிக்கு சென்றபோது திடீரென 'லிப்ட்' கீழ் நோக்கி வரத்தொடங்கியது. இதில் நிலைதடுமாறிய அபிஷேக், 'லிப்ட்டு'க்கும், வெளிப்புற கதவுக்கும் இடையில் விழுந்தார்.
உடல் துண்டாகி பலி
அப்போது 'லிப்ட்' வேகமாக கீழே இறங்கியதில் 'லிப்டு'க்கு இடையில் அவரது கால் சிக்கிக்கொண்டதில் அபிஷேக் அதே இடத்தில் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் 'லிப்டின்' இடையில் இழுக்கப்பட்டு மாட்டிக்கொண்டது. இதைக்கண்டு சக ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர், எழும்பூரில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 'லிப்டை' உடைத்து அபிஷேக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அபிஷேக் உடலை மீட்டனர்.
ராயப்பேட்டை போலீசார் பலியான அபிஷேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.