வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும்

பத்மநாபபுரத்தில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-03-29 18:33 GMT

தக்கலை, 

பத்மநாபபுரத்தில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் அருள் சோபன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கமிஷனர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் நாகராஜன், வினோத்குமார், சிவா, செந்தில்குமார், கிருஷ்ணபிரசாத், மும்தாஜ், சுகந்தி, சுலைகா பேகம், சபீனா, பிரியதர்ஷனி, ஷீபா, நாதிறா பானு, ஷேக் முகம்மது, ஜெமீலா ஆரோக்கிய ராணி, கீதா, ஜெயசுதா, அபிலா, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வீட்டு வரியை குறைக்க...

கூட்டம் தொடங்கியதும் வீட்டு வரி உயர்வு குறித்து துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கமிஷனர் லெனின் கூறிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த கவுன்சிலர்கள் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பேசிய தலைவர் அருள்சோபன், 'வரி உயர்வு என்பது நம் நகராட்சிக்கு மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இடங்களை அளவு செய்ததில் ஒருசில இடங்களில் தவறுகள் ஏற்பட்டதை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் தவறுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு கவுன்சிலர்கள் முன்னிலையில் மறு அளவு செய்யப்படும். இதற்காக வார்டு தோறும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்' என கூறினார். பின்னர் கூட்டத்தின் பொருள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்