வீடு, மின்வாரிய அலுவலகத்தில்திருட முயன்ற அண்ணன்-தம்பி கைது
தேனியில் வீடு, மின்வாரிய அலுவலகத்தில் திருட முயன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டை சருத்துப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மேலாளராக இருந்து பராமரித்து வருகிறார். கடந்த அக்டோபர் 20-ந்தேதி இந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் துணிகள் களைக்கப்பட்டு இருந்தன. பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. திருட முயன்றது தொடர்பாக பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 40), அவருடைய தம்பி ராமமூர்த்தி (37) ஆகிய இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து திருட முயன்றதாக தெரியவந்தது. அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விக்னேசின் வீட்டில் திருட முயன்றதையும், சில நாட்களுக்கு முன்பு தேனி மின்வாரிய அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததையும் ஒப்புக் கொண்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.