திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில் பலத்த மழைக்கு வீடுகள் சேதமானது.
மலைவாழ் குடியிருப்புகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நீர்வழித்தடங்கள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. அத்துடன் பரவலாக வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பும் அடங்கும். இந்த குடியிருப்பில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சூழலில் பலத்த மலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பழனிச்சாமி மற்றும் கண்ணன் ஆகியோர் வீடு சேதமடைந்தது.
கான்கிரீட் வீடுகள்
இது குறித்து மலைவாழ் மக்களுக்கு கூறியதாவது:-
வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கான்கிரீட் வீடுகளை கட்டித்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். ஆனால் எங்களது கோரிக்கை இது வரையிலும் நிறைவேறவில்லை. இதனால் தகரத்தை மேற்கூரையாகவும் மூங்கில் மற்றும் மண்ணைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சுற்றுச் சுவற்றை கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றோம்.
இதனால் இயற்கை சீற்றத்தால் இரவு நேரங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால் படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இந்தப்பகுதியில் ஒரு சில வீடுகள் இடிந்து விழுகின்ற தருவாயில் உள்ளது. அதையும் அதிகாரிகள் பார்வையிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதற்கு அரசு உதவ வேண்டும். மேலும் பலத்த மலைக்கு சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.