அடுக்குமாடி குடியிருப்பில் கிராமப்புற மக்களுக்கு வீடு ஒதுக்கீடு

Update: 2023-06-09 16:41 GMT


நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கிராமப்புற மக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது குறித்து திருப்பூரில் நடந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கண்காணிப்புக்குழு கூட்டம்

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுத்தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி (ஈரோடு), பி.ஆர்.நடராஜன் (கோவை), மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றார்கள்.

பணிகளை விரைந்து முடியுங்கள்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது, அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 39 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கெள்ளப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, அதில் காலதாமதம் ஏற்படாத வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பணிகளில் இடையூறு ஏற்பட்டால் அவற்றை சரி செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

காலியாக உள்ள குடியிருப்புகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 628 குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதில் 2 ஆயிரம் குடியிருப்புகள் பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் நிலத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒரு குடியிருப்புக்கு மத்திய அரசு ரூ.1½ லட்சமும், மாநில அரசு ரூ.7 லட்சமும் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் பங்களிப்பு தொகையாக குடியிருப்பு அமைந்துள்ள பகுதியை பொறுத்து ரூ.70 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை செலுத்தப்பட்டு குடியிருப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அவினாசி,பொங்கலூர் ஒன்றியத்தில் 832 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகள் செல்லாமல் உள்ளனர். அதுபோல் உடுமலை புக்குளம் பகுதியில் 200 குடியிருப்புகள் காலியாக உள்ளன. நகரில் உள்ளவர்கள் கிராம பகுதியில் குடியிருப்பு இருப்பதால் வேண்டாம் என்கிறார்கள். அதனால் காலியாக அந்த குடியிருப்புகள் உள்ளன என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

கூட்டத்தில் எம்.பி.க்கள் பேசும்போது, 'நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கீழ் கிராமப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்கள், அரசு நிலத்தில் குடியிருந்தவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு, அந்த குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்படுவதில்லை. தங்கள் பகுதியில் கட்டப்படும் வீடுகளை நகரத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறார்கள். எங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எங்களை சந்தித்து மனுக்கள் கொடுக்கிறார்கள்.

அதுபோல் நகரத்தில் உள்ளவர்கள் கிராமப்புறத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு செல்ல மறுப்பதால் வீடுகள் காலியாகவே இருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய விதிமுறையில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு அமைச்சர்கள் அரசிடம் தெரிவிக்க வேண்டும்' என்றனர். மேலும் இதுதொடர்பாக கண்காணிப்புக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்