உடலில் காயத்துடன் வாய்க்காலில் பிணமாக கிடந்த ஓட்டல் தொழிலாளி
மயிலாடுதுறையில் வாய்க்காலில் உடலில் காயத்துடன் ஓட்டல் தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் வாய்க்காலில் உடலில் காயத்துடன் ஓட்டல் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் தொழிலாளி
மயிலாடுதுறை கூறைநாடு ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது45). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் அதிகாலை திருவிழந்தூர் ஆழ்வார்குளம் ஆடிய பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது சகோதரர் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அதிகாலை 5 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
உடலில் காயத்துடன் பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் ஆடிய பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் தலையில் காயத்துடன் கண்ணன் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனின் உடலில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.