ஓட்டல் உரிமையாளர் கொலை

காளையார்கோவிலில் கைகழுவுவதில் ஏற்பட்ட தகராறில் சமரசம் செய்ய வந்த ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-22 18:45 GMT

காளையார்கோவில்,

காளையார்கோவிலில் கைகழுவுவதில் ஏற்பட்ட தகராறில் சமரசம் செய்ய வந்த ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கை கழுவுவதில் தகராறு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). இவர் காளையார்கோவிலில் ஓட்டல் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவரது ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் முனீஸ்வரன்(25), காளிமுத்துசேர்வை தெருவை சேர்ந்த காளீஸ்வரன் மகன் சிவசங்கரன் (27), திருநகரை சேர்ந்த லட்சுமணபெருமாள் மகன் பாலாஜி (25), அதே பகுதியை சேர்ந்த சென்னை தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் கதிரேசன் மகன் கவுதம் (24) ஆகியோர் சாப்பிட வந்தனர்.

அவர்கள் சாப்பிட்ட உடன் வாஷ்பேஷனில் கை கழுவாமல் டேபிளிலேயே கைகழுவியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட ஓட்டல் ஊழியர், உரிமையாளர் மகன் பரத் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

ஓட்டல் உரிமையாளர் கொலை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பையா தகராறில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். அப்போது முனீஸ்வரன், கருப்பையாவை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இதில் கருப்பையா அருகில் நின்றிருந்த காரின் மேல் விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு மயக்கமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காளையார்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதுகுறித்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரன், பாலாஜி, சிவசங்கரன் ஆகியோரை கைது செய்தார். தப்பியோடிய கவுதமை தேடி வருகின்றனர்.

சாப்பிட வந்தவர்கள் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து காளையார்கோவில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்