கந்துவட்டி கொடுமையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - பெண் கைது

கொளத்தூர் அருகே கந்து வட்டி கொடுமையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-10 03:06 GMT

செங்குன்றம்:

சென்னை கொளத்தூர் லட்சுமி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவருடைய மனைவி மகேஸ்வரி (42). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். சுதாகர், சென்னை அண்ணாசாலையில் துரித உணவு கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு தீபக்(22), ஜோயல்(15) என 2 மகன்கள் உள்ளனர்.

சுதாகர், செங்குன்றம் அருகே சொந்தமாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கொளத்தூர் குமரன் நகரைச் சேர்ந்த மைதிலி(47) என்ற பெண்ணிடம் நிரப்பப்படாத காசோலையை கொடுத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

இந்த கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு அந்த காசோலையை ரூ.10 லட்சம் கடன் பெற்றதாக நிரப்பிய மைதிலி, அந்த காசோலையை வங்கியில் போட்டு விடுவேன். காசோலை மோசடி வழக்கில் உன்னை கைது செய்ய ஏற்பாடு செய்வேன் என சுதாகரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சுதாகர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சுதாகர் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதிலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர் கந்துவட்டி கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது கந்து வட்டி கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மைதிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்