தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கில்சூடான உணவு பொருட்களை பொட்டல மிட்டால் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கில்சூடான உணவு பொருட்களை பொட்டல மிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-05 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவு பொருட்களை பொட்டலமிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிளாஸ்டிக் பை

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் போது, அந்த பைகளில் இருந்து டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்பினால்-ஏ போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்துவிடும். அந்த உணவை சாப்பிடும் போது, ஹார்மோன் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக்கூடாது எனவும், அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு உள்ளது. ஆனாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை.

நடவடிக்கை

எனவே, சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதால், அதில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களால் நுகர்வோர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பொது சுகாதாரக் குறைபாடுகளைத் தடுக்க, சூடான உணவுப் பொருட்களை, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவது தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்படுகிறது. ஆகையால் உணவு வணிகர்கள் எவரும் டீ, காபி, பால், சாம்பார், ரசம் மற்றும் இதர சூடான குழம்பு வகைகளையும் கூட்டு, பொரியல் போன்ற சூடான உணவுப் பொருட்களையும் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராகவோ அல்லது அதற்குத் தகுதி வாய்ந்தராகவோ இருப்பின், முதல் முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை தவறு செய்தால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், ஒரே வணிகர் திரும்பவும் மூன்றாம் முறையாகக் குற்றமிழைத்தால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, கடையின் இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு வணிகர்கள் தங்களது கடைகளின் முகப்பில், "இங்கு அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும். நுகர்வோர்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் வாங்க, தூக்குவாளி, பிளாஸ்க், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்