தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க கோரி தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
காலமுறை ஊதியம் வழங்க கோரி தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தோட்டக்கலைத்துறை பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மோகன்குமார், கருணைராஜ், ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்ய வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் 10 ஆண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
சம ஊதியம்
பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவப்படி பிடித்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில், பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். டேன்ஹோடா பண்ணை பணியாளர்களை தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணையின் படி பண்ணை பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் பொருளாளர் உண்ணிகிருஷ்ணன், வாசு, ரமேஷ், அருண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.