நடுரோட்டில் வாகனங்களை வழிமறிக்கும் குதிரைகள்
சாய்பாபாகாலனியில் நடுரோட்டில் வாகனங்களை வழிமறிக்கும் குதிரைகளால் விபத்து அபாயம் உள்ளது.
சாய்பாபா காலனி
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க் சாலையில் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதனால் மாணவிகள் அதிகம் பேர் இருசக்கர வாகனங்களிலும், பஸ்சிலும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சாலைகளில் முகாமிட்டு உள்ளன. அவை பாரதி பார்க் பகுதியில் சுற்றி திரிகின்றன.
ஒருசில நேரங்களில் குதிரைகள் நடுரோட்டில் வந்து வாகன ஓட்டிகளை மிரள வைக்கின்றன. இதன் காரணமாக மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகளுக்கு பயந்து செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஏர்ஹாரன் அடிக்கும் போது குதிரைகள் மிரண்டு ஓடுகிறது.
இதனால் எதிரே நடந்து வருபவர்கள் பதற்றத்துடன் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.பாரதி பார்க் ரோடு ராமலிங்கம் காலனி வீதிகளில் குதிரைகள் எந்தநேரமும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன.
அவை சத்தமாக கனைத்தபடி அங்கும்இங்கும் ஒடுவதால் அந்த பகுதி மக்கள் அசத்துடன் சென்று வருகின்றனர்.ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிய வில்லை.
எனவே மாநகராட்சி நிர்வாகமும், மிருகவதை தடுப்பு அமைப்பும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.