வெற்றி கொண்ட அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
வெற்றி கொண்ட அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே புதூர் கிராமத்தில் வெற்றி கொண்ட அய்யனார், அடைக்கலம் காத்தார், நாலுகிடாய் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சாமி வீதிஉலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளுக்கு குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோவிலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் குதிரைகளை தோளில் சுமந்தும், வாகனம் மூலமும் அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்து இறக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அங்கிருந்து திரளான பக்தர்கள் குதிரைகளை சுமந்தவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புதூர் வெற்றி கொண்ட அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் புதூர், காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இரவு பாரிவேட்டை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மிராஸ் சுப்பையா தலைமையிலான விழா குழுவினர்கள் செய்திருந்தனர். பின்னர் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.