திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி கட்டையால் அடித்துக்கொலை - கணவன் கைது

திருப்பரங்குன்றம் அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-06 21:10 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

6 மாதத்திற்கு முன்பு திருமணம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிச்சி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் மதுரையில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் டிரைவராக வேலை பார்த்து உள்ளார்.

தேனி மாவட்டம் கடம்பலைகுண்டு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (22). இவர் அந்த முதியோர் இல்லத்தில் நர்சாக பணியாற்றி வந்து உள்ளார். ஒரே முதியோர் இல்லத்தில் பணியாற்றியதால் இருவரும் காதலித்து வந்து உள்ளனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் ரம்யா 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் சதீஷ்குமார், ரம்யா ஆகிய 2 பேருக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு ரம்யா அவரது கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் இதற்கிடையே சமாதானம் ஆனநிலையில் நேற்று முன்தினம் ரம்யா தனது கணவர் சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தார்.

கர்ப்பிணி அடித்து கொலை

இந்த நிலையில் சதீஷ்குமார், ரம்யா இடையே நேற்று வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் கட்டிட பணிக்காக பயன்படுத்தகூடிய கட்டையால் ரம்யாவை அடித்துள்ளார். அதில் ரம்யா அலறியபடி சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

ரம்யா அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தனர். அப்போது ரம்யா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் கைது

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

திருமணமான 6 மாதத்தில் 3 மாத கர்ப்பிணியை கணவரே அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்