புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆலோசனை கூட்டம்

புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

Update: 2023-08-22 18:45 GMT

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த கோவிலானது வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

ஆண்டு திருவிழா

இந்த நிலையில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா காலங்களில் வேளாங்கண்ணி நகரத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்கள் தடையின்றி சென்றுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவிழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பஸ்களில் பயணம் செய்ய பல்வேறு மண்டலங்களில் இருந்து போதுமான அளவு பஸ்களை 24 மணி நேரமும் இயக்கிட வேண்டும். பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பஸ் நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும். வேளாங்கண்ணியில் யாத்திரிகர்கள் வருகைக்கு தகுந்தவாறு மருத்துவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும். 10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும்.

கடலில் குளிக்க தடை

பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதித்திட வேண்டும். மேலும் திருவிழா நாட்களில் கடற்கரையில் குளிக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து உணவு விடுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இறைச்சி, மீன் விற்பனை சுகாதாரமாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிர்காக்கும் ரப்பர் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, பேரூராட்சிகளின் தஞ்சை மண்டல உதவி இயக்குனர் மாஹீன்அபுபக்கர், உதவி பங்கு தந்தை ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் கார், வேன், ஆட்டோ, உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம், விடுதி உரிமையாளர் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்