தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை,
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சுதந்திர தின விழா 15–ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது. இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி, வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆம்னி பஸ் கட்டணம் மூன்று மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.