எச்.ஐ.வி. தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்

எச்.ஐ.வி. நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக குமரியை மாற்றிட பொதுமக்கள் முன்வரவேண்டும் என வருவாய் அதிகாரி சிவப்பிரியா பேசினார்.

Update: 2022-12-01 19:46 GMT

நாகர்கோவில்:

எச்.ஐ.வி. நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக குமரியை மாற்றிட பொதுமக்கள் முன்வரவேண்டும் என வருவாய் அதிகாரி சிவப்பிரியா பேசினார்.

விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ரோட்டரி சங்க கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எய்ட்ஸ் தடுப்பு பணி

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் உள்பட 62 இடங்களில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் (நம்பிக்கை மையங்கள்) செயல்பட்டு வருகிறது.

மேலும் சுகவாழ்வு மையங்கள், 2 அரசு ரத்த வங்கிகளும், ஒரு கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும், 5 இணைப்பு ஏ.ஆர்.டி. மையமும், 2 தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பணியில் செயல்பட்டு வருகிறது.

1471 பேர் சிகிச்சை

இதுவரை ஏ.ஆர்.டி. மையங்களில் மொத்தம் 2650 பேர் பதிவு செய்து, 1471 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் எச்.ஐ.வி. நோயினால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு நமது மாவட்டத்தை எச்.ஐ.வி. நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேருக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தையல் எந்திரம் மற்றும் 2 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப்பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனர்.

மாணவிக்கு பரிசு

மாவட்ட அளவில் கல்லூரிகள் அளவில் நடைபெற்ற எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருடன் உணவு அருந்தினார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மீனாட்சி, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம்) பெடலிக்ஸ் ஷமிலா, திட்ட அதிகாரி (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) ஜெகதீசன், இணைப்பு அதிகாரி (எ.ஆர்.டி. மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆசாரிபள்ளம்) ஸ்ரீகுமார் பயஸ், மாவட்ட மேற்பார்வையாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம்) சிவகுமார், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ரத்தவங்கி, கூட்டு மருந்து சிகிச்சை மையம் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்