பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்: கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்து விட்டது - பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்
பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குற்றவாளி சூர்யா கூறியுள்ளார்.
சென்னை,
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது.
இதுபற்றி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உதவி கலெக்டர் தலைமையில் நடக்கும் விசாரணையில் முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே செய்தியாளர்கள் சந்திப்பில் சூர்யா கூறியதாவது:-
போலீசாரால் தான் தாக்கப்படவில்லை என்றும் கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்து விட்டது. பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குற்றவாளி சூர்யா கூறியுள்ளார்.
நெல்லையில் விசாசரணை கைதிகளின் பற் களை பிடிங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.