கல்லூரியில் பெண் முதல்வரை மிரட்டிய இந்து அமைப்பு நிர்வாகி கைது
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு கல்லூரியில் பெண் முதல்வரை மிரட்டிய இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு கல்லூரியில் பெண் முதல்வரை மிரட்டிய இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
நன்கொடை கேட்டனர்
நாகர்கோவில் பால்பண்ணை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சுசீலா (வயது 58). இவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கல்லூரியில் இருந்த போது குழித்துறை பெரும் தெருவைச் சேர்ந்த இந்து சேனா அமைப்பு மாவட்ட தலைவரான பிரதீப்குமார் என்ற மணிகண்டன்(40), நிர்வாகி சிதறால் துண்டத்தாறா விளையைச் சேர்ந்த பிரதீஷ் (36) மற்றும் பாகோடு கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி(50) ஆகியோர் வந்தனர். பின்னர் அவரிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
அதற்கு சுசீலா நன்கொடை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுசீலாவை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சுசீலா கொடுத்த புகாரின்பேரில் பிரதீப்குமார் உள்பட 3 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்து அமைப்பு நிர்வாகியான பிரதீசை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
சிறை வாசலில் பரபரப்பு
கைது செய்த பிரதீசை நேற்று மாலையில் மாவட்ட சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். சிறைசாலை வாசலுக்கு சென்றதும் உள்ளே செல்ல மறுத்து திடீரென பிரதீஷ் சத்தம் போட்டார். மேலும் தன்னை விட்டு விடுமாறு போலீசாரிடம் கெஞ்சினார். இதையடுத்து போலீசார் அவரை குண்டுக்கட்டாக சிறைசாலைக்குள் தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறை வாசலில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.