கிறிஸ்தவ தேவாலயம் முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு

மதம் மாற்றி திருமணம் நடப்பதாக கூறி கறம்பக்குடி கிறிஸ்தவ தேவாலயம் முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 18:19 GMT

மதம் மாற்றி திருமணம்...

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் தூய பேதுரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று ஒரு திருமணம் நடைபெற்றது. இதற்காக மணவீட்டார் ஆலயத்தில் கூடி இருந்தனர். பாதிரியார் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் தேவாலயத்தின் முன்பு கூடினர். மண வீட்டாரிடம் ஊர், மதம் குறித்து விசாரித்தனர். மேலும் மதம் மாற்றி திருமணம் நடக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு மண வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரபரப்பு

மேலும் தாங்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் தான் எனவும், மதம் குறித்து நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் எனவும் பெண்கள் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் அங்கு சென்று இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த தேவாலயத்தில் மதமாற்றம் நடப்பதாக தகவல் கிடைத்ததால் விசாரித்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

இதையடுத்து மணமகன், மணமகள் இருவரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றுகளை ேதவாலய நிர்வாகத்தினர் போலீசாரிடம் கொடுத்தனர். இதை பார்த்த இந்து முன்னனியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்