லாரியை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டம்
கோவைக்கு அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற லாரியை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரியை முற்றுகை
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வாரச்சந்தையில் இருந்து வாங்கப்பட்ட பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளை அளவுக்கு அதிகமாக லாரி ஒன்றில் ஏற்றி கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். லாரி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வாண்டையாம்பட்டி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தது. இதையறிந்த சங்பரிவார் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் அந்த லாரியை மறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோசாலைக்கு அனுப்ப வேண்டும்கோவைக்கு அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற லாரியை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் லாரியில் 30 மாடுகளை ஏற்றி வந்தது கோவையை சேர்ந்த வியாபாரிகள் சுதீஷ், ஜான் பாச்சா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் லாரியில் மிக நெருக்கமாக மாடுகளை ஏற்றி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினரும், பா.ஜ.க.வினரும் மாடுகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாடுகளை பாதுகாப்பாக 2 லாரிகளில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் மாடுகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர், வைக்கோல், அகத்திக்கீரை ஆகியவற்றை கொடுத்து வழிபட்டனர். பின்னர் 2 லாரிகளில் மாடுகளை ஏற்றி சென்றனர். இதையடுத்து இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.