விநாயகர் சிலைகளை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விநாயகர் சிலைகளை அகற்றியதை கண்டித்து இந்து முன்னணி-பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தில் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றியதை கண்டித்து அரும்பாவூர், புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளில் பா.ஜனதா சார்பிலும், பாடாலூரில் இந்து முன்னணி சார்பிலும் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அரும்பாவூர் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதாவின் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். புதுவேட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா தெற்கு ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பாடாலூர்-ஊட்டத்தூர் பிரிவு சாலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் ஆலத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவா்கள் வருவாய்த்துறையினரையும், போலீசாரையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர்.