இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேருக்கு கத்தி குத்து

கோவை அருகே இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-14 16:14 GMT

போத்தனூர், ஜூன்.15-

கோவை அருகே இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் வழிமறிப்பு

கோவைைய அடுத்த மதுக்கரை அறிவொழிநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் இந்து முன்னணியில் நிர்வாகியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அண்ணாநகர் பகுதியில் வந்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் சரவணிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனின் கை, மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.

கத்தி குத்து

இதில் காயம் அடைந்த சரவணன் சத்தம் போட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இந்து முன்னணி நகர பொறுப்பாளர் ஆனந்த் (20) ஓடிவந்து சரவணனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த வாலிபர் ஆனந்தையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து கத்திக்குத்தில் காயம் அடைந்த சரவணன், ஆனந்த் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக மதுக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபர் எதற்காக இந்து முன்னணி நிர்வாகிகளை கத்தியால் குத்தினார், தப்பி ஓடிய வாலிபர் யார், முன் விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்