காலிக்குடங்களுடன் மலைவாழ் மக்கள் சாலை மறியல்

கொல்லிமலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து அங்குள்ள மலைவாழ் மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-04 18:45 GMT

சேந்தமங்கலம்

மலைவாழ் மக்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சியில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை சுற்றி 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் அங்கு பழங்கள் விற்பனை, டீக்கடை, ஓட்டல் போன்ற பல்வேறு வியாபார கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக கூறினர். இதற்கிடையே அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 2 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளை தற்காலிகமாக ஊராட்சி நிர்வாகத்தினர் துண்டித்துள்ளனர். அதை தொடர்ந்து அந்த குடிநீர் குழாய்களை இணைக்காமல் விட்டு விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மலைவாழ்மக்கள் நேற்று அங்கு திடீரென்று ஒன்றாக திரண்டு வந்து சாலையில் காலிக்குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வழக்கமாக அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு சேலம் மாவட்டம் தம்மம்பட்டிக்கு செல்லும் அரசு பஸ்சும், காலை 7.20 மணிக்கு நாமக்கல் செல்லும் வெண்டலபாடி அரசு பஸ்சும் செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் மணிகண்டன், துணைத்தலைவர் நீலாமணி வெள்ளையன், வார்டு உறுப்பினர் ஓரி வள்ளல் மற்றும் வாழவந்தி நாடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக இணைப்பு கொடுக்கப்பட்டு சில தினங்களில் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்