டாக்டர் பலியான சம்பவத்துக்கு இழப்பீடு கேட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

லாரி மோதி விபத்தில் டாக்டர் இறந்ததாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-21 19:41 GMT

மதுரை, 

லாரி மோதி விபத்தில் டாக்டர் இறந்ததாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் பலி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் மகன் சந்தோஷ் பாபு. இவர் டாக்டருக்கு படித்துமுடித்துவிட்டு, மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2006-ம் ஆண்டில் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கார் ஓட்டிச்சென்றார்.

அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற ஜெகநாதன், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

குழப்பும் தகவல்கள்

இந்த வழக்கில் இழப்பீடு வழங்க முறையான ஆவணங்கள் இல்லை. விசாரித்ததில் எதிரே வந்த வாகனத்தினால் விபத்து ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லை. எனவே இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது என கீழ்கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் மகன் கார் ஓட்டிச்சென்றபோது, அவரது கவனக்குறைவின் காரணமாகத்தான் விபத்து நடந்துள்ளது. ஆனால் மனுதாரர் தரப்பினர் பெரும் தொகையை இழப்பீடாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சந்தோஷ் பாபு, எதார்த்தமாக நடந்த விபத்தில் சிக்கி இறந்ததாக ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இவற்றை கீழ்கோர்ட்டு ஏற்கவில்லை என வாதாடினார்.

புகார்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சந்தோஷ் பாபு, ஓட்டிச்சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் அதே இடத்தில் அவர் பலியானார் என்பதில் சந்தேகம் இல்லை. அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவின் காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. விபத்து நடந்த விதம், சம்பவம் குறித்து மனுதாரர்கள் தெரிவித்த புகார் போன்றவை உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதா என்பதே தற்போதைய சர்ச்சைக்குரிய விஷயம். இறந்த சந்தோஷ் பாபுவுடன் வந்த ஜெகநாதன், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார். ஆனால் அவர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று விபத்து குறித்து புகார் கொடுத்தார் என்பது நம்பும்படியாக இல்லை.

ரூ.1 லட்சம் அபராதம்

சில மாதங்களுக்கு பின்பு அவர் இறந்துவிட்டதால், கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்த முடியவில்லை என்றும் கீழ் கோர்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். சாட்சிகள் அளித்த சாட்சியங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அதேபோல இந்த விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கையிலும் சில குளறுபடிகள் உள்ளன.

இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த கீழ்கோர்ட்டு, மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. கீழ்கோர்ட்டின் உத்தரவில் எந்த சட்டவிரோத நடவடிக்கையும் இல்லை.

உத்தரவு

எனவே அந்த தீர்ப்பில் நாங்கள் தலையிட தேவையில்லை. மனுதாரர்கள் இழப்பீடு பெற வேண்டும் என்பதற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். எனவே மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் 4 வாரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்