போதைக்காக மருந்துகளை உட்கொள்வதை தீவிரமானதாக கருத வேண்டும்

போதைக்காக மருந்துகளை உட்கொள்வதை தீவிரமானதாக கருத வேண்டும் என்றும், இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரிய மருந்து கடைக்காரரின் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-08-20 17:18 GMT


போதைக்காக மருந்துகளை உட்கொள்வதை தீவிரமானதாக கருத வேண்டும் என்றும், இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரிய மருந்து கடைக்காரரின் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போதைக்காக மருந்து

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை நகர் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறேன். போதை ஊசி விற்றதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரரின் கடையில் போதை தரும் மருந்துகளை சிலருக்கு ஊசி மூலம் செலுத்தி இருக்கிறார்கள்.. இதுதொடர்பான வழக்கில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உயிருக்கு ஆபத்து

மேலும் மருத்துவத்துறையில் மிகவும் அரிதாக பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கொடூரமான குற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த மருந்துகளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மேலும் மொத்த சமூகமும் பாதிக்கக்கூடும்.

எனவே போதை தரும் மருந்துகள் குறித்து மனுதாரரை விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடினார்.

தீவிரமானது

இதனை பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

போதைக்காக மருந்துகளை உட்கொள்வதை தீவிரமானதாக கருத வேண்டும்.. இந்த வழக்கில் சிக்கி உள்ள மற்றவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பான உண்மையை கண்டறிவதற்காக, மனுதாரரை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம். எனவே இந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்