கோவை, காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் 'நாக்' கமிட்டி வழங்கியது
கோவை காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரத்தை 'நாக்' கமிட்டி வழங்கியுள்ளது.
சென்னை,
கோவை காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரத்தை 'நாக்' கமிட்டி வழங்கியுள்ளது.
உயர்தர அங்கீகாரம்
கோவை காருண்யா நகரில் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளான செயற்கை நுண்ணறிவியல், சைபர் செக்யூரிட், டேட்டா சயின்ஸ், ஆப்டோமேட்ரி, தடய அறிவியல், குற்றவியல், தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல், மீடியா ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் பல பாடப்பிரிவுகள் தேசிய மதிப்பீட்டு குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை காருண்யா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகள், ஆய்வகங்கள், கற்றல் வசதிகள், பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து, அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி, நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் ('நாக்'), காருண்யா பல்கலைக்கழகத்துக்கு 'ஏ.பிளஸ்.பிளஸ்.' என்ற உயர்தர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வாழ்த்து
காருண்யா பல்கலைக்கழகத்தில், போதுமான கட்டமைப்பு, கணினி ஆய்வகங்கள், விளையாட்டரங்கம், கேண்டீன், ஆடிட்டோரியம் ஆகியவை சிறப்பாக உள்ளது எனவும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், 25 கோடிக்கும் அதிகமான ஆராய்ச்சிகள், 14 புது கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகள், தொழில்நுட்ப பரிமாற்றத்துக்காக கிராமங்களை தத்தெடுத்தல், நீர், அறிவியல் தொழில்நுட்பத்துக்கான தனித்துவ பங்களிப்பு, அதிநவீன ஆய்வகங்களின் செயல்பாடு நன்றாக உள்ளதாகவும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.இதேபோல அணு ஆராய்ச்சி பயிற்சி ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை கூட்டு ஆய்வகங்களையும் அந்த குழுவினர் பாராட்டியுள்ளனர்.
காருண்யா பல்கலைக்கழகம் 'ஏ.பிளஸ்.பிளஸ்.' உயர்தர அங்கீகாரம் பெறுவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், இணை துணை வேந்தர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் குழு, முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பணியாளர்களை, காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன், அறங்காவலர் சாமுவேல் தினகரன் ஆகியோர் வாழ்த்தினார்கள்.
மேற்கண்ட தகவல் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.