ஐகோர்ட்டு நீதிபதிகள் சாமி தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-05 18:45 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் நாகார்ஜூன் மற்றும் சாம்பசிவராவ் நாயுடு ஆகிய இருவரும் குடும்பத்துடன் 2 நாட்கள் குமரி மாவட்டம் சுற்றுப்பயணம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு களித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 2 நீதிபதிகளும் குடும்பத்துடன் வருகை தந்தனர். அவர்களை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் வரவேற்றனர். பின்னர் தட்சிணாமூர்த்தி சன்னதி, கொன்றையடி, நவக்கிரக மண்டபம், இசைத்தூண்கள், தாணுமாலய சாமி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி, 18 அடி உயரமுள்ள விஸ்வரூபம் ஆஞ்சநேயர் சன்னதி, இந்திர விநாயகர் மற்றும் கோவில் சுற்றுப்பிரகாரங்களில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் பணியாளர் நல்லசிவன் பிள்ளை கோவில் தல வரலாறு குறித்து இந்தி மொழியில் எடுத்துரைத்தார். பின்னர் 2 நீதிபதிகளும் கோவிலின் பெருமை குறித்து கோவிலில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் பதிவு செய்தனர். நீதிபதிகள் வருகையையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து 2 நீதிபதிகளும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்