முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த இளம்பெண்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து இளம்பெண் ஏமாற்றிவிட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). இவர் தனது உறவினர்களுடன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். நான் பெண் பார்ப்பதை தெரிந்து கொண்ட அவர், 'பவானியை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும்படியும்' என்னிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந்தேதி எனக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 2 மாதம் குடும்ப வாழ்க்கை சென்றது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் உரிமையாளருடன் எனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, நடத்தை சரியில்லாததால் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி எனது மனைவி அவரது தாயாருடன் சென்றுவிட்டார். ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை, தனக்கு திருமணம் செய்து வைத்து மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் எனது மனைவி மீது நடவடிக்கை எடுத்து, நான் திருமணத்தின்போது எனது மனைவிக்கு போட்ட 20 பவுன் நகைகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.