பருவதமலையில் மூலிகை செடி, கொடிகள் எரிந்து நாசம்
பருவதமலையில் மூலிகை செடி, கொடி, மரங்கள் எரிந்து நாசமாயின.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட தென்மகாதேவமங்கலம்-கடலாடி கிராமங்களுக்கு இடையே 4,560 அடி உயரமும், ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை செடி, கொடி, மரங்களுடன் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை அமைந்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பருவதமலை மீது மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கோவிலுக்கு செல்ல ஏணி படி, கடப்பாறை நெட், தண்டவாளம் பாதை, தொங்கு பாலம் போன்றவற்றை பக்தர்கள் கடந்து சென்று அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது இம்மலையில் மர்ம நபர்கள் புல்லுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் மூலிகை செடி, கொடி, மரங்கள் எரிந்து நாசமாகின்றன. மேலும் வனவிலங்குகளும் தீயில் கருகி இறந்து விடுகின்றன.
தீயை அணைக்க போதுமான வசதி இல்லாததால் தீ தானாகவே எரிந்து நிற்கும் வரை ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகின்றன. எனவே, தீயை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.