சேலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம்-மாநகர போலீசார் அறிவிப்பு
சேலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர்.
சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதை காண முடிகிறது. இந்தநிலையில், சேலம் மாநகரில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மாநகர போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகரத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள்கள் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து விபத்துகளை தடுக்க மாநகர போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.