ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை-அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-05-10 19:45 GMT

ஊட்டி

ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மலர் கண்காட்சி

கோடை சீசன் தொடங்கி இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்கண்காட்சி வருகிற 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக 35,000 மலர் தொட்டிகளில் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமனீ, மற்றும் பல புதிய இரக ஆர்னமென்டல்கேல், ஓரியணீடல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆனீடிரைனம், ட்யூப்ரஸ் பிகோனியா பலவகையான கிரைசாந்திமம் ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தாரியம் போன்ற 325 வகையான ரகங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பூங்காவில் நடவுசெய்யப்பட்டுள்ள 5½ லட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு மலர்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப்பபணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் சுமார் 10 ஆயிரம் பல வகையான வண்ண மலர்த்தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பல வண்ண மலர்தொட்டிகளை மலர்காட்சித்திடலில் அடுக்கி வைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை

பூங்காவில் மலர் கண்காட்சிக்காக புல் மைதானங்களில் தயார்படுத்தப்பட்ட பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்களுக்கு விருந்து படைக்கிறது. கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இந்த ஆண்டு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் சுற்றுலா வரும் 13-ந் தேதி முதல் நடக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நீலகிரி மாவட்டத்துக்கு பல முக்கியதஸ்கர்கள் ஹெலிகாப்டர் மூலம் தான் வருகின்றனர். ரோப்கார் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டதும், அதற்கான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அமைச்சர் பூங்காவுக்கு வந்தபோது தோட்டக்கலை துறை ஊழியர்கள் தங்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு இருப்பதால் 2 நாட்களுக்குள் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

முன்னதாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 315 பேருக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்