கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,352 வழக்குகள் தீர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 352 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட செசன்சு நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கி பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலை வகித்து பேசினார்.
பெரியகுளம் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி சிங்கராஜ், சார்பு நீதிபதி மாரியப்பன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சர்மிளா ஆகியோர் முன்னிலையிலும், உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவணசெந்தில் குமார், மாஜிஸ்திரேட்டு ராமநாதன் ஆகியோர் முன்னிலையிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
ஆண்டிப்பட்டி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிச்சைராஜன் ஆகியோர் முன்னிலையிலும், போடி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேலுமயில் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 4,352 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.