காஞ்சீபுரம் அருகே பழுதடைந்த கனரக லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பழுதடைந்த கனரக லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 05:35 GMT

காஞ்சீபுரம், 

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலைகள் மாற்றி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கனரக வாகனம் திடீரென பழுதடைந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் சென்னை-பெங்களூரு, பெங்களூரு- சென்னை என இரு மார்க்கமாக செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் 3 கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சென்னை- பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

சம்பவ இடத்துக்கு காலதாமதமாக வந்த போலீசார், போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியை 2 கிரேன்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்