நாகர்கோவிலில் நடுவழியில் நின்ற 2 பஸ்களால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவிலில் நடுவழியில் நின்ற அரசு பஸ்களால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-16 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடுவழியில் நின்ற அரசு பஸ்களால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டார்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதனால் 5 நாட்கள் வரை இந்த சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. பணிகள் முடிவடைந்ததையடுத்து இந்த சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் புனித சவேரியார் ஆலய சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்த இடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் கன்னியாகுமரி மார்க்கத்தில் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சின் முன்சக்கரம் ஒன்று புதைந்தது. இதனால் நடுவழியில் நின்ற அந்த பஸ் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்சின் டிரைவர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பஸ் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த போக்குவரத்து பாதிப்பு சீரானது.

கடுமையா1ன பாதிப்பு

இதேபோல் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலத்தில் நேற்று ஒரு அரசு பஸ் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி செல்லக்கூடிய வாகனங்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த வாகனங்களும் அங்குமிங்கும் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. மேலும் ஒழுகினசேரி சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அவர்களது வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கிடையே மீட்பு வாகனம் மூலம் பழுதாகி நின்ற அரசு பஸ்சை அப்புறப்படுத்த அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அந்த சாலையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெருக்கடி சீரானது. இருப்பினும் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்தது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்