கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி குறைந்தது
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
பூக்கள் உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு, கரம்பக்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களிலும், அதே போல வம்பன், ராயப்பட்டி, அரசடிப்பட்டி சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், காட்டுமல்லி உள்பட ஏராளமான வகை பூக்கள் உற்பத்தி செய்வதே பிரதான விவசாயமாக உள்ளது.
அன்றாடம் உற்பத்தியாகும் பூக்கள் கீரமங்கலம் பூ கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.
பனி பொழிவால் உற்பத்தி பாதிப்பு
திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 முதல் 3 டன் வரை பூக்கள் விற்பனையாகாமல் தேங்கி குப்பைகளில் கொட்டப்படுகிறது. தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக பருவநிலை மாறி தொடர்ந்து இரவு பகலாக பனிப் பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் செடிகள் துளிர் இல்லாமல் பூக்கள் உற்பத்தியும் முடங்கிவிட்டது.
மேலும் மிகச்சிறிய அளவில் பூக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சராசரியான அளவு பூக்கள் விற்பனைக்கு வரவில்லை என்கின்றனர். தற்போது ஓரளவு கூடுதல் விலைக்கு விற்பனையாகும் நேரத்தில் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி இல்லாததால் விழாக்களுக்கு பூக்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.