அனுப்பர்பாளையம்
திருப்பூர் சுற்று வட்டாரத்தில் வழக்கத்தை விட அதிகமான குளிர் மற்றும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பனிப்பொழிவு
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.
ஆனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான அவினாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் கடந்த ஆண்டுகளை விட வழக்கத்திற்கு மாறாக குளிரும், பனிப்பொழிவும் மிக அதிகமாக உள்ளது. தினமும் மாலை 6 மணிக்கே ஒரு குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுவதுடன், காலை 8 மணி வரை கடுங்குளிர் நிலவுகிறது. இதேபோல் பனிப்பொழிவும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அளவுக்கு அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர். கடந்த சிலநாட்களாக வீடுகளில் இரவில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், ெஜர்க்கின், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர்.
அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் கூட அதிக குளிர், பனி காரணமாக காலையில் தாமதமாக எழும்பும் சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் குளிரும், பனியும் இருப்பதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
----