சிவகாசி, தாயில்பட்டி பகுதிகளில் பலத்த மழை

சிவகாசி, தாயில்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-12-14 19:10 GMT

சிவகாசி, 

சிவகாசி, தாயில்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை பின்னர் பலத்த மழையாக மாறியது. 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

அதிலும் குறிப்பாக சிவகாசி பஜார் பகுதியில் உள்ள வாருகால்கள் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாலை 4 மணிக்கு மழை நின்ற பின்னரும் பல இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது.

நீர்மட்டம்

வழக்கமாக மாலை 4.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். நேற்று மாலை திடீர் மழை பெய்ததால் மாலை 4 மணிக்கு பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல தெருக்களில் கடந்த சில நாட்களாக பேவர்பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லகூட பெரும் சிரமம் அடைந்தனர்.

சிவகாசி நகர பகுதி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நேற்று மாலை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் பெய்த மழையால் நீர் பெரியகுளம், சிறுகுளம் போன்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதேபோல் நகரப்பகுதியில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தாயில்பட்டி

அதேபோல தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், ராமச்சந்திராபுரம், சேதுராமலிங்கபுரம், மேல ஒட்டம்பட்டி, கீழத்தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் பருத்தி, மக்காச்சோளம், சூரியகாந்தி, பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ததால் மானாவாரி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். மழை காரணமாக பட்டாசு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்