பெரம்பலூரில் பலத்த மழை; பேரளி சுங்கச்சாவடி மேற்கூரை காற்றில் பறந்தது

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது. பேரளி சுங்கச்சாவடி மேற்கூரை காற்றில் பெயர்ந்து ½ கிலோமீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டது.

Update: 2022-06-02 18:57 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் கடுமையாக வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் நேற்று 101.1 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலூரில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மேலும் மழை பெய்யும் போது பலத்த காற்றும் வீசியது. சுமார் ¾ மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குன்னம் பேரளி பகுதியில் சாலையோரம் உள்ள மரங்கள், வயல் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி கிராமத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த சுங்கச்சாவடியின் மேற்கூரை பெயர்ந்து ½ கிலோமீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு வயல்பகுதியில் கிடந்தது. மேற்கூரை விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. மேலும், மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.பேரளி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடந்த நிலையில் நேற்று அடித்த சூறைக்காற்றால் சுங்கச்சாவடி மேற்கூரை பெயர்ந்து காற்றில் பறந்ததால் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். கொட்டரை கிராம பகுதிகளில் உள்ள மரங்கள், குரும்பபாளையம் கிராம பகுதியில் போடப்பட்டிருந்த தகர கூரையிலான ஒரு வீடு, ஒரு மாட்டு கொட்டகை காற்றில் பெயர்ந்து சுமார் 20 அடி தூரம் விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்