தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேற்சொன்ன 7 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு' எச்சரிக்கை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுதினம்
இதேபோல் நாளை (சனிக்கிழமை) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சீர்காழியில் அதிகனமழை
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பெய்துள்ளது. இங்கு ஆய்வு மையத்தின் கூறுப்படி, அதி கனமழை பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக தஞ்சை 18 செ.மீ., கொள்ளிடம் 16 செ.மீ., சிதம்பரம் 15 செ.மீ., சேத்தியாத்தோப்பு, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை தலா 12 செ.மீ. காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, ஆர்.எஸ்.மங்கலம், புவனகிரி தலா 11 செ.மீ., இளையாங்குடி 10 செ.மீ., உசிலம்பட்டி, மாமல்லபுரம், தரங்கம்பாடி, மானாமதுரை தலா 9 செ.மீ., மணல்மேடு, கமுதி தலா 8 செ.மீ., நெய்வாசல் தென்பாதி, திருக்கழுக்குன்றம், மயிலாடி, வாடிப்பட்டி, திருபுவனம், மதுராந்தகம், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் தலா 7 செ.மீ., மதுரை விமான நிலையம், மஞ்சளாறு, பரமக்குடி, திருப்போரூர், ஸ்ரீமுஷ்ணம் தலா 6 செ.மீ. பெலாந்துறை, பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, தொண்டி, ஆண்டிப்பட்டி, பெரியார், கடலூர், வந்தவாசி, வைகை அணை, கீழ் கோதையார், கோலியனூர், கடவனூர், கொடநாடு, காட்டுக்குப்பம் தலா 5 செ.மீ. உள்பட அனேக இடங்களில் மழை பெய்திருக்கிறது.