காட்டுத்தீயை கட்டுப்படுத்திய கனமழை

கொடைக்கானலில், வனத்துறையினரை திணறடிக்கும் வகையில் பற்றி எரிந்த காட்டுத்தீயை கனமழை கட்டுப்படுத்தியது.

Update: 2023-03-16 17:14 GMT

'டால்பின் நோஸ்'

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக தனியார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன.

இந்தநிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான 'டால்பின் நோஸ்' பகுதிக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் நேற்று திடீரென காட்டுத்தீ பற்றி கொண்டது.

புகை மண்டலம்

கொடைக்கானல் வனச்சரகத்துக்கு உட்பட்ட டால்பின் நோஸ் செல்லும் வழியான திருவள்ளுவர் நகர் அருகே நேற்று காலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்தது. வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள செடி, கொடிகள், மரங்கள் எரிந்தன.

காட்டுத்தீ எதிரொலியாக 'டால்பின் நோஸ்', வட்டக்கானல், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட இடங்களில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். குறிப்பாக தீத்தடுப்பு கோடுகளை அமைத்ததுடன், எதிர் திசையில் தீ வைத்து கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் இறங்கினர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருவள்ளுவர் நகர் அருகே உள்ள வனப்பகுதியை கடந்து தான் 'டால்பின் நோஸ்' சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு காட்டுத்தீயால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வனத்துறையினர் கருதினர்.

இதைக்கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதன் காரணமாக 'டால்பின் நோஸ்' பகுதியை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கருணை காட்டிய கனமழை

கொடைக்கானலில், தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி முதல் கொடைக்கானல் நகர் பகுதியில் சாரல் மழை அவ்வப்போது பெய்தது.

இதேபோல் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த கனமழையினால், மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்து விட்டது. வருண பகவானின் கருணையால், பெய்த மழையால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

வனத்துறையினருக்கு சவால்

ஒவ்வொரு கோடைகாலத்திலும் கொடைக்கானலில் காட்டுத்தீ பற்றி எரிவது வாடிக்கையாகி விட்டது. அதனை அணைத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

எனவே கொடைக்கானலில் எரியும் காட்டூத்தீயை கட்டுப்படுத்த கூடுதலாக வனத்துறை ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். நவீன உபகரணங்களை பயன்படுத்தி, தீயை அணைக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்