பலத்த காற்றுடன் கனமழை; 10 மரங்கள் சாய்ந்து விழுந்தன
சேலத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை
சேலம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை வேளையில் மழையும் பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று மதியம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது, பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சங்கர் நகர், கிச்சிப்பாளையம், களரம்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மரங்கள் முறிந்தன
மழையுடன் வேகமாக காற்று வீசியதால் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்த 2 பெரிய மரங்கள் முறிந்து சாலையோரம் விழுந்தன. இதனால் அண்ணா பூங்காவில் இருந்து மைதானத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதேபோல், முள்ளுவாடி கேட் பகுதியில் வெங்கடப்பன் சாலையோரம் இருந்த ஒரு மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. அப்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீது கிளைகள் விழுந்தது. ஆனால் காருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதேபோல், மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலக வளாகத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் முள்ளுவாடி கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளும் சேதமடைந்தன. சேலத்தில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல், கன்னங்குறிச்சி-சேலம் மெயின்ரோட்டில் ஜட்ஜ்ரோடு அருகே நேற்று மாலை மழை பெய்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் சாலை ஓரம் இருந்த ராட்சத மரத்தில் கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு அடுத்தடுத்து இருந்த 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கன்னங்குறிச்சி பிரதான சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.